தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் தென்கரைக்கோட்டையில் இருந்து வடகரை கிராமம் வரை 2.80 கிலோ மீட்டர் நீளத்திற்கு, கிராம சாலைகள் வளர்ச்சி அபிவிருத்தி திட்டத்தின் கீழ், சுமார் ரூ.50 லட்சத்தில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதில், ஒரு கிலோ மீட்டர் தூரம் வரையிலான சாலைப் பணிகள் முடிவடைந்துள்ளன. மீதமுள்ள சாலைகள் அமைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகின்றன. இதில் இரண்டு தளமாக அமைக்கப்பட வேண்டிய சாலைகளில், கிராமத்திற்கு வெளியே உள்ள பகுதிகளில் சிறு ஜல்லிகள் மூலம் ஒரே தளமாக தரமற்ற முறையில் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், புதிய தார்சாலை அமைத்த இரண்டாவது நாளே, சாலைகளில் ஆங்காங்கே ஜல்லி கற்கள் பெயர்ந்து பழுதாகி உள்ளன.
வடகரை பகுதியில் சாலைப் பணி நடந்தபோது கிராம மக்கள், தரமற்ற முறையில் சாலைப்பணி நடைபெறுவதாகவும், தற்போது வரை அமைக்கப்பட்டுள்ள சாலையில் ஆங்காங்கே ஜல்லி கற்கள் பெயர்ந்துள்ளதாகவும் கூறி பணிகளை தடுத்து நிறுத்தியுள்ளனர். சாலைகள் அமைக்க குறைந்த அளவு தார் பயன்படுத்தி, அதற்குப் பதிலாக கருப்பு நிற ஆயிலை பயன்படுத்திவருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதனை அரசு அலுவலர்கள் கண்டுகொள்ளாததால், சாலை அமைத்து நான்கு நாள்களிலே, ஜல்லிகற்கள் அனைத்தும் பெயா்ந்து வருவதால், தரமற்ற முறையில் அமைக்கப்படும் சாலை தங்களுக்கு தேவையில்லை எனக் கூறி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து தரமான சாலை அமைப்பதாக உறுதியளித்த பிறகே, மக்கள் கலைந்துச் சென்றனர்.