கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு, கேரள வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. இதனால் தண்ணீர் வரத்து அதிகரித்ததையடுத்து கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த தண்ணீர் தமிழ்நாடு - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லை வந்தடைந்தது.
நேற்று முன்தினம் மாலை விநாடிக்கு 8,000 கனஅடியாக இருந்த நீரின் வரத்து தற்போது 8 ஆயிரத்து 600 கன அடியாக உயர்ந்துள்ளது. நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தண்ணீர் வரத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இது சுற்றுலா பயணிகள் மற்றும் விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்ய இன்று ஐந்தாவது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஆனால் கர்நாடக பரிசல்கள் மட்டும் இயக்கப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒகேனக்கல் பரிசல் ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.