தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் துறையினருக்கு கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், தருமபுரி ஆட்சியர் மலர்விழி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் கோவிந்தசாமி, மருத்துவர்கள், செய்தியாளர்களுக்கு கரோனா வைரஸ் பரிசோதனை நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.பி. அன்பழகன் கூறுகையில், "தருமபுரி மாவட்டத்திற்கு முதல் முறையாக 480 ரேபிட் டெஸ்ட் கிட்கள் வழங்கப்பட்டுள்ளன. காவல் துறையினர், மருத்துவத் துறையினர், இதர அரசு அலுவலர்கள், செய்தியாளர்கள் என 200 பேருக்கு கரோனா வைரஸ் சோதனை நடத்தப்பட்டது. தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதுவரை 1,161 பேருக்கு கரோனா வைரஸ் பரிசோதனை நடைபெற்றுள்ளது. கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் இருந்து 719 ரத்த மாதிரிகளுக்கு சோதனை நடைபெற்று இதுவரை நடைபெற்ற 1, 880 சோதனைகளில் யாருக்கும் வைரஸ் தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.
தருமபுரி மாவட்ட எல்லையில் 10 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து வரக்கூடிய 1,400க்கும் மேற்பட்டோரை கண்காணித்து அவர்களுக்கு மருத்துவ சோதனை நடத்தப்பட உள்ளது. வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களை சோதனை செய்து தனிமைப்படுத்தும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களை தொடர்ந்து கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துவருகிறது.
தருமபுரி மாவட்டத்தில் வெளி நாட்டிலிருந்து வந்து தங்கியிருப்பவர்கள் 668 பேர். இதுவரை 28 நாள்கள் பூர்த்தி அடைந்தவர்கள் 662 பேர். அவர்கள் தங்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். 28 நாட்கள் பூர்த்தியாகாமல் இருப்பவர்கள் இன்னும் ஆறு பேர் மட்டுமே. மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து முழு அர்ப்பணிப்போடு செயல்பட்டு வருவதால் தருமபுரி வைரஸ் தொற்று இல்லாத மாவட்டமாக தொடர்ந்து இருந்துவருகிறது. பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் தேவையில்லாமல் வெளியிடங்களில் சுற்றித் திரியாமல் மாவட்ட நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்", என்றார்.
இதையும் படிங்க... நடந்து வந்த கூலித் தொழிலாளர்கள்: சொந்த ஊர் செல்ல உதவிய காவல் துறை