தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ‘காவிரிக்கு மாற்று காவிரியே!’ என்ற முழக்கத்துடன் ராசி மணலில் அணை கட்ட வலியுறுத்தி பி.ஆர். பாண்டியன் தலைமையில் கடந்த 10ஆம் தேதி பூம்புகாரில் இருந்து தொடங்கிய பேரணி இன்று காலை தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் ராசி மணல் பகுதிக்கு வந்தடைந்தது. இப்பேரணியில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், “தமிழ்நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக மக்கள் குடிநீர் இல்லாமல் தவித்து வருகின்றனர். 125 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாலைவனமாக மாறியுள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளாக குறுவை சாகுபடியை காவிரி டெல்டா விவசாயிகள் இழந்துள்ளனர். கடலில் வீணாக கலக்கக்கூடிய 200 டிஎம்சி தண்ணீரைத் தேக்கி வைக்க ராசி மணலில் அணை கட்டவேண்டும். இதற்கு கர்நாடக அரசு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அணை கட்டப்படும் போது ஒரு பகுதி கர்நாடக அரசுக்கு சொந்தம் என்பதால் அவர்கள் அதில் மின்சாரம் உற்பத்தி செய்து கொள்ளலாம். காவிரி நீர் கர்நாடக எல்லையைக் கடந்த பிறகு தமிழகத்திற்கு தான் சொந்தம், இது அரசியலமைப்பு சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
காவிரி நீரை சொந்தம் கொண்டாடுவதற்கு கர்நாடகத்திற்கு உரிமை இல்லை. எனவே மேகதாட்டு பகுதியில் கர்நாடக அரசு அணை கட்டுவதை மத்திய அரசும், காவிரி ஒழுங்காற்று குழுவும் தடுத்து நிறுத்த வேண்டும். ராசி மணலில் அணை கட்டுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அணை கட்டத் தவறினால் விவசாயிகள் அனைவரும் ஒன்றுகூடி கட்டுமான பணிகளை மேற்கொள்வோம். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது அணை கட்ட வலியுறுத்தி விவசாயிகளை ஒன்று திரட்டி டெல்லியில் உண்ணாவிரதம் போராட்டம் மேற்கொள்வோம்” என்று தெரிவித்தார்.