தருமபுரி: பாட்டாளி மக்கள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ், தருமபுரி மாவட்டத்தில் இரண்டு நாட்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், இன்று காலை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சேலத்தில் இருந்து தருமபுரி நோக்கி சாலை மார்கமாக சென்றுக்கொண்டிருந்தார்.
அப்போது சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தருமபுரி அடுத்த குண்டல்பட்டி அருகே, திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்ற முரளி என்பவரும், பெண் ஒருவரும் விபத்தில் சிக்கி காயங்களுடன் சாலையில் விழுந்து கிடந்தனர்.
இதனை பார்த்த மருத்துவர் அன்புமணி ராமதாஸ், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் ஆகியோர் உடனடியாக காரை நிறுத்தி கீழே இறங்கி காயமடைந்த முரளி மற்றும் பெண் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர், தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை தொடர்பு கொண்ட அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார். சாலையில் விபத்தில் சிக்கியவர்களை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.