தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான டில்லிபாபு இன்று (செப்.1) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
இந்தச் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறும்போது, “கரோனா ஊரடங்கு காரணமாக வேலைவாய்ப்பு இல்லாமல் தவிக்கும் ஏழை மகளிரை தனியார் நுண் நிதி நிறுவன ஊழியர்கள் தகாத வார்த்தைகளில் திட்டி கட்டாய வசூல் செய்துவருகின்றனர்.
தருமரி மாவட்டத்தில் 270க்கும் மேற்பட்ட நபர்கள் தனியார் நிதி நிறுவனங்களிடம் 30 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை கடன் பெற்றுள்ளனர்.
கடன் பெற்றவர்கள் சிறிய மளிகைக் கடை சாலையோரக் கடைகளை வைத்து வாழ்க்கையை நடத்துபவர்கள். ஐந்து மாத கரோனா ஊரடங்கு காரணமாக வேலைவாய்ப்பு இல்லாமல் வீட்டில் முடங்கிக்கிடக்கும் பெண்களிடம் தனியார் நுண் நிதி நிறுவனத்தினர் மிரட்டி பணம் வசூல் செத்துவருகின்றனர்.
தருமபுரி நல்லம்பள்ளி அடுத்த மிட்டரெட்டிஅள்ளி பகுதியில் தனியார் நிதி நிறுவனத்தினர், பெண் ஒருவரை பணத்தை திருப்பிச் செலுத்தச் சொல்லி நெருக்கடி கொடுத்துள்ளனர். நெருக்கடியால் அந்தப்பெண் மன உளைச்சலில் இறந்து விடுவேன் எனக்கூறியுள்ளார். இறந்தாலும் பரவாயில்லை. உங்கள் மீது இன்சூரன்ஸ் செய்துள்ளோம். அதன்மூலம் நாங்கள் பணத்தை பெற்றுக்கொள்கிறோம் என பேசியுள்ளனர்.
இதுதொடர்பாக அனைத்து ஜனநாயக மாதர் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் 70 தனியார் நிதி நிறுவனங்கள் அடாவடியாக வசூல் செய்வதையே நிறுத்தி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம்வரை கால அவகாசம் வழங்கி அதன்பிறகு கடன்தொகை வசூலிக்க அரசு உத்தரவிட வேண்டும். மாவட்ட நிர்வாகம் கூட்டுறவு வங்கிகள் மற்றும் நிலவளவங்கிகள் மூலம் பெண்களுக்கு கடனுதவி வழங்கவேண்டும்" என்றார்.
இச்சந்திப்பின்போது அனைத்து ஜனநாயக மாதர் சங்கத்தினர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: பணத்தை கட்ட சொல்லி பெண்ணிடம் தகாத முறையில் பேச்சு - தனியார் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்ட மக்கள்