தர்மபுரி: பென்னாகரம் அடுத்த பி.அக்ரஹாரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முனியப்பன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் இரண்டாவது செவ்வாய் கிழமை திருவிழா பிரமாண்டமாக கொண்டாடப்படும்.
இந்நிலையில் இன்று(டிச.29) கொண்டாடப்பட்ட இந்த திருவிழாவிற்கு, பென்னாகரம் மட்டுமில்லாமல், தருமபுரி, அரூர், கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்தனர். இந்த திருவிழாவுக்கு வந்த பக்தர்கள் விரதமிருந்து, தங்களது பல்வேறு வகையான நேர்த்தி கடன்களை செலுத்தினர்.
மேலும் இந்த திருவிழாவில் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் ஆடு, கோழிகளை காணிக்கை செலுத்தி தங்களது நேர்த்தி கடன்களை செலுத்தினர்.
இத்திருவிழாவையொட்டி இப்பகுதியில் நூற்றுக்கணக்கான சிறு, சிறு கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் அசம்பாவிதங்கள் நடக்காமல் தவிர்க்க பென்னாகரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து திருவிழாவில் கலந்துகொண்டனா். அதேசமயம் சுகாதாரத் துறை சார்பில் கரோனா விழிப்புணர்வு, பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இதையும் படிங்க: போதை இளைஞரை திருடன் என கூறி தாக்கியவர்களுக்கு வலைவீச்சு