தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கும்மனூர் கிராமத்தில் நடராஜ் (70) என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. அதில் அவருடைய அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜகோபால் (35) என்பவர் கர்நாடகா மாநிலம் பெங்களூர் மருத்துவமனை, ஓசூர் பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் இருந்து மருத்துவக் கழிவுகள், தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவற்றை லாரியின் மூலம் கொண்டு வந்து தரம் பிரித்து கொட்டி எரித்து வந்துள்ளார்.
இதனால் சுற்று வட்டாரத்தில் உள்ள பொதுமக்களுக்கு தலை சுற்றல், மூச்சு திணறல் உள்ளிட்ட பல்வேறு உடல் கோளாறுகள் ஏற்படுவதாக, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில், வியாழக்கிழமையன்று வழக்கம் போல் மருத்துவக் கழிவுகளை ஏற்றி வந்த லாரியை அப்பகுதி மக்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல் ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி, பொதுமக்களை கலைந்து போக சொன்னதால் ஆத்திரமடைந்த கிராமத்தினர், காவல் ஆய்வாளரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து நிகழ்விடத்திற்கு வந்த பாலக்கோடு தாசில்தார் வெங்கடேஷ்வரன், வட்டார வளர்ச்சி அலுவலர் தனபால், துணை காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடந்தினர்.
இதனையடுத்து இரண்டு நாட்களில் அங்கு கொட்டி வைத்துள்ள மருத்துவக் கழிவுகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததால், பொதுமக்கள் கலைந்து சென்றனர். மேலும், மருத்துவக் கழிவுகளை ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்து பஞ்சப்பள்ளி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.