கோயம்புத்தூர் மாவட்டம் இருகூரிலிருந்து கர்நாடகா மாநிலம் தேவனகொந்தி வரை பெட்ரோலியம் குழாய் பதிக்கும் திட்டத்தை விளைநிலங்கள் வழியாக செயல்படுத்தக்கூடாது, நெடுஞ்சாலை ஓரமாக செயல்படுத்த வேண்டும் எனக் கூறி பாப்பாரப்பட்டியில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பாப்பாரப்பட்டி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் போராட்டக்காரர்கள் மற்றும் வருவாய் துறை பிபிசிஎல் நிறுவன அலுவலர்கள், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) தணிகாசலம் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் பென்னாகரம் வட்டாட்சியர் சேதுலிங்கம், பாப்பாரப்பட்டி விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்போது காத்திருப்பு போராட்டத்தை கைவிட கோரி அலுவலர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு அரசு விளைநிலங்கள் வழியாக குழாய் பதிக்கும் திட்டத்தை செயல்படுத்தாமல் நெடுஞ்சாலைகள் வழியாக செயல்படுத்துவது குறித்து கொள்கை முடிவு அறிவிக்கும் வரையில் திட்டப்பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று விவசாயிகள் வலியுறுத்தினா். இதை அலுவலர்கள் ஏற்க மறுத்ததால், காத்திருக்கும் போராட்டத்தில் விவசாயிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனா்.