தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட எரிமலை மற்றும் கோட்டூர் மலை இரண்டு வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். எரிமலை வாக்குச்சாவடியில் 327 வாக்காளர்களும், கோட்டூர் மலை வாக்குச்சாவடியில் 340 வாக்காளர்களும் என 667 வாக்குகள் உள்ளனர்.
இப்பகுதியானது, மலை மீது அமைந்துள்ளதால் முறையான சாலை வசதி செய்து தரக்கோரி சில தினங்களாக தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுவதாக தெரிவித்தனர். அலுவலர்கள் நடத்திய பிறகு நேற்று இரண்டு வாக்குச்சாவடிகளுக்கு கழுதைகள் மூலம் வாக்குப்பெட்டிகள் அனுப்பப்பட்டன.
மாவட்டம் முழுவதும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஆனால் மலை கிராமத்தில் உள்ள இரண்டு வாக்குச்சாவடிகளில் அரசியல் கட்சி முகவர்கள்கூட வாக்குச்சாவடிக்கு செல்லவில்லை. எங்களுக்கு சாலை வசதி செய்து கொடுத்தால் மட்டுமே வாக்களிப்போம் என்று தொடர்ந்து தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசு அலுவலர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் இப்பகுதி மக்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இரு வாக்குச்சாவடிகளில் 12 மணி நிலவரப்படி இன்னும் வாக்குப்பதிவு தொடங்கவில்லை. தொடர்ந்து அலுவலர்கள் பேச்சுவார்த்தைக்கு பிறகு எரிமலை பகுதியை சேர்ந்த பொதுமக்கள், அலுவலர்களின் வாக்குறுதியை ஏற்றுக்கொண்டு புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்து வருகின்றனர். கோட்டூர் மலையில் தேர்தல் புறக்கணிப்பு தொடர்ந்து வருகிறது.
இதையும் படிங்க: சைக்கிளில் வந்து வாக்களித்த நடிகர் விஜய்!