தருமபுரி: பாலக்கோடு, பாப்பாரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இரண்டு யானைகள் சுற்றித்திரிந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்தது. அதில் மேக்னா யானையை சின்னத்தம்பி என்ற கும்கி யானை உதவியுடன் முதுமலை காப்பகத்திற்கு வனத்துறையினர் பிடித்துச் சென்றனர்.
மீதமிருந்த ஆண் யானை நேற்று மாலை 4 மணி அளவில் பாப்பாரப்பட்டி பகுதியில் இருந்து வெளியேறி கம்பைநல்லூர் பகுதியில் இன்று காலை நுழைந்துள்ளது. சுமார் 17 மணி நேரமாக நடந்து பொதுமக்கள் மற்றும் விவசாய பயிர்களுக்கு எந்தவித சேதமும் செய்யாமல் யானை பயணித்துள்ளது.
கம்பைநல்லூர் அடுத்த கெலவள்ளி பகுதியில் உள்ள ஒரு தென்னந்தோப்பு வழியாக ஒற்றை ஆண் யானை ஒன்று சுற்றித்திரிந்தது. அதனை பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் பிந்தொடர்ந்து சென்றனர். ஒருகட்டத்தில் யானை அருகே இருந்த ஏரி பகுதிக்கு சென்றது. ஏரிக்கரையின் மீது ஏறியபோது எதிர்பாராத விதமாக தாழ்வாக இருந்த உயர் அழுத்த மின் கம்பியில் யானையின் தலை உரசியது. இதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து யானை உயிரிழந்தது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
சம்பவ இடத்தில் வனத்துறையினர் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 8-ஆம் தேதி மாரண்டஹள்ளி பகுதியில் விவசாய தோட்டத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி மூன்று யானைகள் உயிரிழந்த நிலையில், இன்று மேலும் ஒரு யானை மின் ஒயரில் உரசி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யானையை விரட்டும் நடவடிக்கையின் போது வனத்துறையினர் அந்த பகுதியில் மின்சாரத்தை துண்டித்திருந்தால் இந்த யானை உயிரிழப்பை தடுத்திருக்கலாம் என வன ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.