தர்மபுரி: திமுக மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். சமூக வலைதளம் மூலம் தன்னிடம் உதவி கேட்பவர்களுக்கு, தன்னால் இயன்ற உதவிகளைச் செய்துவருகிறார்.
இந்தச்சூழ்நிலையல், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கூலி வேலை செய்து டிப்ளோ படித்த தனக்கு பிடெக் படிக்க ஆசை என்றும் அதற்கு உதவி செய்வேண்டும் எனவும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பட்டியலின மாணவி ருசுபோடா கோரியிருந்தார். இதைக்கண்ட தர்மபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார், மாணவியின் சொந்த ஊருக்குச் சென்று 1 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிய சம்பவம் பாராட்டைப் பெற்றுள்ளது. மேலும், மாணவியின் மேற்படிப்புக்காக வங்கி மூலம் கடன் பெற ஏற்பாடு செய்து தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய தர்மபுரி மக்களவை உறுப்பினர், "ருசுபோட என்ற பெண் கல்விக்காக உதவிகோரியிருந்தார். ருசுபோட குடும்பத்தில் ஐந்து பெண்குழந்தைகள் உள்ளனர். 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை செய்து தனது டிப்ளமோ படிப்பை படித்துள்ளார். பிடெக் படிப்பு படிக்கவேண்டும் என்று தனக்கு ஆசை இருப்பதாக சமூக வலைதளங்களில் தெரிவித்திருந்தார்.
கல்வி கற்பதற்கு பணம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் ருசுபோடவின் சொந்த ஊருக்கு வந்து ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளேன். மேலும், வங்கிக்கடன் பெற்றுத் தருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு குடும்பம் வளர்ச்சி கல்வியின் மூலமே சாத்தியம். கல்வியால்தான் சமூகம் முன்னேறும், சமூக நீதியை காக்க முடியும்" என்றார்.
நிதியுதவி பெற்ற மாணவி ருசுபோட பேசுகையில், "எனது தந்தை விவசாய வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றிவருகிறார். அவரின் வருவாய் எங்கள் குடும்பத் தேவைக்கே சரியாக இருக்கிறது. கல்விக் கட்டணம் கட்ட முடியாததால் சான்றிதழ் கல்லூரியிலேயே இருந்தது. இதனால், மேற்படிப்பு பிடெக்கில் சேரமுடியவில்லை. கல்விக்கட்டணம் கட்ட பணம் இல்லை என்பதால் ஓராண்டு வேலை செய்து அதில் வரும் பணத்தை வைத்து கட்டணத்தை கட்டி சான்றிதழைப் பெற்று உயர்கல்வியில் சேரலாம் என எனது தந்தை தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து தேசிய ஊரக வேலை வாய்ப்புத்திட்டத்தின் கீழ் வேலை செய்துவந்தேன். இதனை கேள்விபட்ட மாவட்ட ஆட்சியர் சான்றிதழைப் பெற்றுத்தந்தார். தர்மபுரி மக்களவை உறுப்பினர் இந்த சம்பவத்தை கேள்விபட்டு எனக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். கல்விக்காக உதவி செய்திருக்கிறார். இந்தப்பணத்தை வைத்து நான் படிப்பேன். அடுத்து மேற்படிப்பு உதவிக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ளச் சொல்லியிருக்கிறார். அவருக்கு மிகவும் நன்றி" என்றார்.
இதையும் படிங்க: மொரப்பூர்-தர்மபுரி ரயில்பாதை இணைப்பு திட்டம்: எம்பி செந்தில்குமார் கோரிக்கை கடிதம்!