தருமபுரி மாவட்ட ஊரக முகமை அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்புக் குழு கூட்டம் தருமபுரி மக்களவை உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில்குமார், அரசு நிர்வாகம் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் மக்களுக்கு முழுமையாக சென்று சேரவேண்டும். ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கும் சென்று சேர வேண்டும் என சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் கட்டப்படும் தனி நபர் கழிப்பறைகள் பல்வேறு பகுதிகளில் பயன்பாடற்று காணப்படுகிறது. இரண்டு அல்லது மூன்று தனி நபர் கழிப்பறைகளை இணைத்து பொதுக்கழிப்பறையாக மாற்றி கட்டிக்கொடுக்கவும், அதை சம்பந்தப்பட்ட ஊராட்சிகள் மூலம் பராமரிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, துப்புரவு பணியாளர்கள் பாதிப்பில்லாமல் உரிய உபகரணங்களை பயன்படுத்தி தூய்மை பணிகளை மேற்கொள்ள போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திட்டங்கள், சாலை விரிவாக்க திட்டங்கள் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தருமபுரி -மொரப்பூர் ரயில் பாதை இணைப்பு திட்டப்பணிகள் மிக விரையில் தொடங்கும். அதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. தற்போது முதற்கட்டமாக ஒதுக்கப்பட்டுள்ள நிதி ரயில் பாதை அளவீட்டுப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என தெரிவித்தார்.