தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் ரூ.10.10 கோடி மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள 110/11 கி.வோ துணைமின் நிலையத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வாயிலாகத் திறந்துவைத்தார்.
தருமபுரி இலக்கியம்பட்டியில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகா கலந்துகொண்டு குத்துவிளக்குகேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
இலக்கியம்பட்டியில் துணைமின் நிலையம் அமைக்கப்பட்டதால் மின் நிலையத்தைச் சுற்றி சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரத்திற்குத் தடையில்லா, சீரான மின்சாரம் வழங்கப்படும்.
மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், தீயணைப்புத் துறை அலுவலகம், அரசு மருத்துவக் கல்லூரி, மாவட்ட தலைமை மருத்துவமணை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய அரசு அலுவலகங்களுக்குத் தடையில்லா, சீரான மின்சாரம் வழங்கப்படும்.
துணைமின் நிலையத்தை அடுத்த முக்கிய இடங்களான நேருநகர், ஒட்டப்பட்டி, இலக்கியம்பட்டி, பாரதிபுரம், செந்தில்நகர் ஆகிய இடங்களில் 24 மணிநேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும். இதனால் 14 ஆயிரம் மின் நுகர்வோர்கள் பயனடைவார்கள்.
இந்நிகழ்வின்போது பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் கோவிந்தசாமி, அரூர் சட்டப்பேரவை உறுப்பினர் வே. சம்பத்குமார், மின் துறை பணியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.