தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கோட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாயக்கண்ணன். இவரது மகன் பாலமுருகன். இவருக்கு வயது 40. இவர் அதே பகுதியைச் சேர்ந்த லாரி முதலாளி கடவுள் என்பவரிடம் லாரி ஓட்டுனராக வேலை செய்து வந்துள்ளார். கடந்த 14 ஆம் தேதி கோலார் பகுதியில் இருந்து பால் பவுடர் ஏற்றிக்கொண்டு அசாம் மாநிலம் நவகான் மிலிட்டரி கேன்டீனுக்கு சென்றுள்ளார்.
லாரியில் கன்னியாகுமரி மாவட்டம் பொய்கை பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் கூடுதல் ஓட்டுனராக சென்றுள்ளார். ஆனால் அங்கு சென்ற பாலமுருகன் திடீரென காணாமல் போய்விட்டதாகவும், திரும்ப தமிழகத்திற்கு லாரி எடுத்துச் சென்றுவிட்டதாகவும் வெங்கடேசனும், லாரி உரிமையாளர் கடவுளும் பாலமுருகன் உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் அசாம் மாநிலம் கோல்காட் பகுதியில் ஆணுறுப்பு அறுக்கப்பட்டு மர்மமான முறையில் பாலமுருகன் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதனை கோல்காட் பகுதி டிஎஸ்பி அங்கிருந்து தமிழக காவல்துறைக்கும், அவரது குடும்பத்தாருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனை அறிந்த பாலமுருகனின் மனைவி தன் கணவனின் உடலை அரசு சார்பில் அங்கிருந்து கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், அவருடைய சாவில் மர்மம் இருப்பதாகவும் முறையான விசாரணையை மேற்கொண்டு கொலையாளிகள் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து தருமபுரி மாவட்ட வருவாய் அலுவலர் ரஹ்மத்துல்லா கானிடம் மனு அளித்துள்ளார்.