தர்மபுரி: தர்மபுரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவுத் திட்டம், தர்மபுரி - மொரப்பூர் இணைப்பு ரயில் திட்டம் ஆகும். இத்திட்டம் அறிவிக்கப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
தற்போது இத்திட்டத்தின் நில அளவீடு பணிக்காக, முதல் கட்டமாக இரண்டரை கோடி ரூபாய் நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் மொரப்பூா் - சென்னம்பட்டி அருகே ரயில் பாதை அமைக்கும் பணிக்கான நில அளவீடு செய்யும் இடத்தில், தர்மபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் இன்று (ஜூலை 24) ஆய்வு மேற்கொண்டார்.
முன்னேற்றமில்லா தர்மபுரி - மொரப்பூர் இணைப்பு ரயில் திட்டப்பணி
ஆய்வுக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ரூ. 358 கோடி மதிப்பிலான தர்மபுரி - மொரப்பூர் இணைப்பு ரயில் திட்டத்துக்காக, கடந்த 2019ஆம் ஆண்டு ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
அதற்குப் பிறகு ரயில் திட்டப் பணியில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. தர்மபுரி மாவட்ட ஆட்சியர், சேலம் கோட்ட அலுவலகம், சென்னை ரயில்வே பொது மேலாளர், ரயில்வே வாரிய தலைவர், ரயில்வே துறை இணை அமைச்சர், ரயில்வே அமைச்சர் போன்றோரை தொடர்ந்து சந்தித்தும் பணிகள் தொடங்கப்படவில்லை.
நிதி ஒதுக்கீடுக்கு பிறகான பணி தாமதம் குறித்த ஆய்வில், திட்டத்தில் தர்மபுரி நகரப்பகுதியில் வரக்கூடிய எட்டு கி.மீட்டர் சுற்றளவுள்ள பகுதியில் கட்டடங்கள் அதிகம் உள்ளது கண்டறியப்பட்டது. கடந்த 1901ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ரயில்பாதை, 1945ஆம் ஆண்டு வரை செயல்பட்டு வந்தது.
நில அளவை பணிக்காக ரூ.2.5 கோடி ஒதுக்கீடு
இந்த பாதை தற்போது இல்லை. தர்மபுரி நகரப்பகுதியில் வரக்கூடிய 8 கி.மீட்டருக்கு மாற்றுப்பாதை கண்டறியப்பட்டுள்ளது. கோரிக்கையை ஏற்ற ரயில்வே துறை, நில அளவை பணிகளுக்காக 4 அலுவலர்களை நியமித்துள்ளது.
நாளொன்றுக்கு ஒரு கி.மீட்டர் தூரம் நில அளவீடு பணிகள் நடைபெற உள்ளது. நில அளவைப் பணிகளுக்காக ரூ. 2.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாததால், 10 கி.மீட்டர் மட்டும் நில அளவை செய்யப்பட்டுள்ளது. இதர பகுதிகள் அளவீடு செய்யப்படாததால் பணி நடைபெறாமல் உள்ளது.
தாமதத்துக்கு அதிமுக அரசே காரணம்
இவ்வளவு நாட்களாக தர்மபுரி- மொரப்பூர் இணைப்பு ரயில் திட்டம் கிடப்பில் போடப்பட்டு தாமதமானதற்கு, கடந்த அதிமுக அரசே காரணம். தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால், மாநில அரசு அலுவலர்களின் ஒத்துழைப்போடு இத்திட்டம் நிறைவேற்றப்படும்” என்றார்.
இதையும் படிங்க: அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை - எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு