தருமபுரியில் இருந்து சேலம், வேலூர் செல்லும் வாகனங்கள் அரூர் வழியாக செல்லும் பிரதான சாலையில்தான் செல்லவேண்டும். இந்த சாலை தற்போது குண்டும், குழியுமாக இருப்பதால் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து உயிரிழப்புகள் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.
இதனை மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளாத காரணத்தால், பொதுமக்கள் தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமாரிடம் புகார் அளித்தனர்.
இதைத் தொடர்ந்து செந்தில்குமார் இன்று அரூர் பகுதிக்கு வந்து சேதமடைந்த சாலைகளை பார்வையிட்டார். பின்பு நெடுஞ்சாலை துறை அலுவலர்களை நேரில் வரவழைத்து சாலைகள் பணி எப்போது தொடங்கப்படும் என கேட்டறிந்தார். நிதி ஒதுக்கியும், ஒப்பந்தம் விடப்பட்டும் ஏழு மாதங்கள் ஆகியும் இன்றுவரை பணிகள் தொடங்கப்படவில்லை. இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
![வாக்குவாதம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-dpi-01-dmk-mp-senthilkumar-angery-vis-7204444_27092019175959_2709f_1569587399_172.jpg)
மேலும் இந்த சாலையில் இதுவரையில் எத்தனை விபத்துகள் நிகழ்ந்து இருக்கின்றன என அதிகாரிகளிடம் விவரம் கேட்டதற்கு, இதுகுறித்த விவரங்கள் தற்போது கையில் இல்லை, போதிய விவரங்களை இரண்டு நாட்கள் கழித்து தருவதாக தெரிவித்தனர். இதற்கு துறை சார்ந்த விவரங்களைக்கூட கையில் வைத்துக் கொள்ளாமல் வெறுமனே வேடிக்கை பார்ப்பதற்காகவா இங்கு வந்தீர்கள் என அலுவலர்களை எம்.பி. செந்தில்குமார் கடுமையாக சாடினார்.
பின்பு சாலைப் பணி ஒப்பந்தம் செய்துள்ள ஒப்பந்ததாரரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட அவர் சாலைப் பணிகள் எப்போது தொடங்கப்படும், எப்பொழுது முடிக்கப்படும் என கேட்டறிந்தார். அதற்கு இந்த சாலைப்பணிகள் வருகிற அக்டோபர் 2ஆம் தேதி தொடங்கி, 2021 ஜனவரி மாதத்திற்குள் முடிக்கப்படும் என உறுதியளித்தார்.