தருமபுரி நான்கு ரோடு பகுதியில் இன்று அதிமுக தோ்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. அப்போது தருமபுரி பாமக வேட்பாளா் வெங்கடேஷ்வரன், பாப்பிரெட்டிபட்டி அதிமுக வேட்பாளா் கோவிந்தசாமி, அரூா் அதிமுக வேட்பாளா் சம்பத்குமார் ஆகியோரை ஆதரித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் தனது காரில் இருந்தபடியே பிரசாரம் செய்தார்.
அப்போது பேசிய அவர், ”தருமபுரி மாவட்டத்திற்கும் எனக்குமான உறவு தாய்க்கும் சேய்க்குமான உறவு. பாமகவின் கொள்கை கோட்பாடுகள் உன்னதமானது. ஒகேனக்கல் குடிநீர் திட்டம் வர தொடர்ந்து நான் தான் போராடினேன். எனவே, தருமபுரி மாவட்டம் வளர்ச்சி பெற இந்தக் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். கோவை, திருப்பூா் மாவட்டம் போல் தருமபுரியும் வளர்ச்சி பெற இந்த கூட்டணி வெற்றி பெற்றாக வேண்டும்.
தருமபுரியில் இருந்து பிரிந்த கிருஷ்ணகிரி மாவட்டம் வளா்ச்சி பெற்றுள்ளது. ஆனால் தருமபுரி மாவட்டம் இன்றும் வளா்ச்சி பெறவில்லை. இம்மாவட்டம் எல்லா நிலைகளிலும் சிறப்பாக வளர வேண்டும். அதற்கு, கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு ஆகியவற்றில் ஈடுபடும் திமுக கூட்டணியினர் இம்முறை டெபாசிட் வாங்கக்கூடாது” என்றார்.
இதையும் படிங்க: ஏற்காடு நாகலூர் எஸ்.டி. காலனி மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்!