தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ள கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை ஆய்வகத்தை உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் பார்வையிட்டார். தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வைரஸ் தொற்று சோதனை நடத்த மத்திய அரசு கடந்த 10ஆம் தேதி அனுமதி அளித்ததையடுத்து, அங்கு கரோனா வைரஸ் தொற்றுக்கான சோதனை நடத்தப்பட்டுவருகிறது.
இந்நிலையில் அந்த பரிசோதனை கூடத்தை தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் பார்வையிட்டார். வைரஸ் தொற்று கண்டுபிடிப்பு ஆய்வகத்தில் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தேவையான உபகரணங்கள் உள்ளவர்களுக்கான உடைகள் உள்ளிட்டவை குறித்தும் அவர் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வைரஸ் தொற்று கண்டுபிடிக்கும் பரிசோதனை அனுமதி கேட்டிருந்தோம். தற்போது மத்திய அரசிடமிருந்து அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், 11ஆம் தேதி முதல் சோதனை தொடங்கியது. இதில் மூன்று பேருக்கு சோதனை செய்யப்பட்டு, சோதனையில் கரோனா வைரஸ் தொற்று இல்லை என தெரியவந்ததுள்ளது. இதனையடுத்து தற்போது தினமும் தேவைக்கு ஏற்ப சோதனை செய்யப்பட்டுவருகிறது.
வெளிமாநிலங்களிலிருந்து தருமபுரி மாவட்டத்திற்கு வரக்கூடியவர்கள் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டு தங்களை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க...தமிழகத்தில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீடிப்பு - முதலமைச்சர் பழனிசாமி!