தர்மபுரி: பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாநில அளவில் விவசாயிகளுக்கான கரும்பு சாகுபடியில் நவீன தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சியை வேளாண் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தொடங்கிவைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், "அரசின் விவசாய திட்டங்கள் இந்தப் பயிற்சியில் எடுத்துரைக்கப்படும். இது தவிர விவசாயிகள் சார்பில் மாற்று கருத்து இருந்தால் அதை இந்த பயிற்சி மூலம் பதிவு செய்யலாம்.
மாவட்டத்தின் விவசாய வளர்ச்சி குறித்து ஆலோசனைகளையும் விவசாயிகள் வழங்கலாம். இது போன்ற கருத்துகளும், ஆலோசனைகளும் முதலமைச்சர் பார்வைக்கு எடுத்துச்சென்று, அதன் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
தமிழ்நாட்டில் 130.33 லட்சம் ஹெக்டேரில் 45.82 ஹெக்டேர், அதாவது 35 விழுக்காடு சாகுபடி நிலங்கள் உள்ளன. இதில் ஏரிகள், கிணறுகள், கால்வாய்கள், குளங்கள் மூலம் 25.65 ஹெக்டேர் மட்டும்தான் பாசன வசதிபெறுகிறது.
இச்சூழலில், எட்டு ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் 100 லட்சம் மெட்ரிக் டன்னுக்கு மேலாக உணவு உற்பத்தி செய்து, தொடர்ந்து தமிழ்நாடு சிறந்த இடத்தில் விளங்கிவருகிறது.
பிரதம மந்திரி நுண்நீர் பாசனதிட்டம், தேசிய வேளாண் வளர்ச்சித்திட்டம், தேசிய உணவு பாதுகாப்புத்திட்டம் ஆகிய மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் மூலம் நெல், சிறுதானியம், பயிறு வகை பயிர்களுக்கு முக்கியத்துவம் அளித்து, வேளாண் இடுப்பொருள்கள் மற்றும் வேளாண் கருவிகள் 50 முதல் 100 விழுக்காடு மானியத்தில் கொடுக்கப்பட்டு உற்பத்தியை பெருக்க அரசு திட்டங்கள் வகுத்துள்ளது.
நடப்பாண்டில் உணவு உற்பத்தி 125 லட்சம் மெட்ரிக் டன் சாதனையை அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த எட்டு ஆண்டுகளில், தமிழ்நாடு வேளாண் துறையின் செயல்பாடுகளால் கிருஷிசர்மான் விருது 5 முறை அரசு பெற்றுள்ளது. கரும்பு பயிருக்கென தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் 10 கோடி ரூபாயும், தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தில் 75.9 லட்சம் ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது.
பிரதம மந்திரி பயிர்காப்பீடு திட்டத்தின் மூலம் 37.32 லட்சம் விவசாயிகளுக்கு 7 ஆயிரத்து 702 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இதில், மாநில அரசின் பங்களிப்பாக 1997 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது" என்றார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகா உடன் இருந்தார்.