தருமபுரியில் மதிகோன்பாளையம் என்ற இடத்தில் இரு வழிச்சாலை விரிவாக்கப் பணிகளை தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தொடங்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'தருமபுரியிலிருந்து பென்னாகரம் வழியாக ஒகேனக்கலுக்கு செல்லும் சாலையை இருவழியிலிருந்து நான்கு வழியாக விரிவாக்கும் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட உள்ளது. அதன் முதற்கட்டமாக 18.95 கோடி மதிப்பில் மதிகோன் பாளையத்திலிருந்து ஆட்டுகாரம்பட்டி வரை சுமார் 5.8 கிலோமீட்டர் தூரம் சாலை அமைக்கப்பட உள்ளது' எனத் தெரிவித்தார்.
இதேபோன்று, மதிகோன் பாளையத்திலிருந்து நாயக்கன்கொட்டாய் வரை திருப்பத்தூர் சாலையில் சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு 25.6 எட்டு கோடி ரூபாய் மதிப்பில் இருவழிச்சாலை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கும் திட்டம் செயல்படுத்தப்படுமென்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து தமிழ்நாடு அரசு சாலை மேம்பாட்டிற்கான நிதிகளை ஒதுக்கி தருமபுரியின் சாலைப் பராமரிப்புப் பணிகள் விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்குமென்று அவர் உறுதியளித்தார்.
வேலூர் மக்களவைத் தேர்தல் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, 'அதிமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்ட வெற்றி. சென்ற தேர்தலில் திமுக மக்களை ஏமாற்றுகின்ற வகையில் வாக்குறுதிகளை வழங்கி வெற்றிபெற்றுள்ளது. தற்போது அது மக்களுக்கு புரிந்துவிட்டதால், அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர் ஏ.சி. சண்முகம் வெற்றிபெறுவார்' என்று நம்பிக்கை தெரிவித்தார்.