தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டத்திலுள்ள 10 அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 965 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.39.01 லட்சம் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள், 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்களுக்கு பேனாக்களை உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வழங்கினார்.
இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் எஸ். மலர்விழி தலைமை வகித்தார். இவ்விழாவில் பேசிய அமைச்சர், “இந்தியளவில் உயர் கல்வியில் தமிழ்நாடு முதலிடம் வகிப்பதற்கு, பல்வேறு சிறப்புத் திட்டங்கள் மூலம் பள்ளிக் கல்வியில் இடைநிற்றலைத் தவிர்த்ததும் முக்கியக் காரணமாகும். மாணவர்கள் பள்ளி இடைநிற்றலைத் தவிர்க்க அரசு 14 வகையான விலையில்லாப் பொருள்களை வழங்கிவருகிறது.
அரசுப் பள்ளிகளில் தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுவருகின்றனர். பள்ளிக் கல்வியை முடிக்கும் மாணவர்கள் தகுதியின் அடிப்படையில் உயர் கல்விக்குச் செல்லும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். போட்டித் தேர்வுகளில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் வெற்றிபெற்றுவருகின்றனர்.
பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கிராமப்புறங்களில் உள்ள ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் தடையின்றி கல்வி பயில வேண்டும் என்பதற்காக 10, 11, 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு 5,000 ரூபாய் வைப்புத்தொகையாக வைக்கப்பட்டு அவர்கள் உயர் கல்விக்குச் செல்லும்போது 6,024 ரூபாய் வழங்கப்படுகிறது.
இதனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை, எளிய மாணவர்கள் இடைநிற்றலைத் தவிர்த்து பள்ளிக் கல்வியையும் உயர்கல்வியையும் பயில இந்த வாய்ப்பை தமிழ்நாடு அரசு வழங்கிவருகிறது. பள்ளிக் கல்வி, உயர் கல்வியில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் எண்ணற்ற நலத்திட்ட உதவிகளை மாணவ, மாணவியர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி எதிர்காலத்தில் தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: பொதுத்தேர்வு மூன்று மணி நேரமாக உயர்வதாக அமைச்சர் அறிவிப்பு!