தர்மபுரி: தமிழ்நாட்டில் இன்று (நவ.6) ஆர்எஸ்எஸ் பேரணி நடத்துவதற்காக சென்னை நீதிமன்றத்தில் அனுமதி கோரி இருந்தனர். ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதிக்கக்கூடாது என விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.
சென்னை நீதிமன்றம் உத்தரவு கொடுத்தால் நவ.6ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் பெண்களையும் இழிவுபடுத்துகின்ற, மனுஸ்மிருதி நூலை ஒரு லட்சம் பிரதிகளாக அச்சிட்டு, இலவசமாகப் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று நடைபெற இருந்த ஆர்எஸ்எஸ் பேரணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, விசிக சார்பில் திட்டமிட்டபடி, மனுஸ்மிருதி நூல் விநியோகம் தர்மபுரி மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அரூரில் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதன்படி அரூர் ரவுண்டானா, பேருந்து நிலையம், பஜார் தெரு உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள், வணிகர்கள், பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், அரசு மற்றும் தனியார் போக்குவரத்து ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்டோருக்கு இலவசமாக மனுஸ்மிருதி நூல்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: இந்தி திணிப்பை நிரூபித்தால் ரூ.10 லட்சம் பரிசு - அர்ஜுன் சம்பத்