தருமபுரி மாவட்டம் குமாரசாமிபேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான தெப்பகுளத்தைக் கோயில் நிர்வாகிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.25 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைத்து பாதுகாப்பு இரும்பு வேலி அமைத்துப் பராமரித்துவந்தனர்.
இந்நிலையில், குமாரசாமிபேட்டை திருவிக தெரு பகுதியைச் சார்ந்த சிலர் கோயில் தெப்பக்குளத்தில் குளித்துள்ளனர். குளித்த முடித்த பின்பு அனைவரும் வீட்டுக்குத் திரும்பியபோது, பாலசுப்பிரமணியம் மகன் தயாநிதி (40) என்பவர் மட்டும் வீடு திரும்பவில்லை.
இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் தருமபுரி தீயணைப்புத் துறைக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறை வீரர்கள் ஒரு மணி நேர தேடுதல் வேட்டைக்குப் பிறகு தயாநிதியின் சடலத்தை மீட்டனர்.
கோயில் தெப்பக்குளத்தில் குளிக்கச் சென்று நீரில் மூழ்கி உயிரிழந்த தயாநிதிக்கு (40) பானுப்பிரியா என்ற மனைவியும், காவிய தர்ஷினி, தேசிய தர்ஷினி என இரு மகள்கள் உள்ளனர். தருமபுரி காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.