தருமபுரி மக்களவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் ராஜசேகரை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
பொதுமக்களிடையே கமல்ஹாசன் பேசுகையில்,
”தருமபுரி மாவட்டத்தில் இருந்து மூன்றரை லட்சம் இளைஞர்கள் வேலைத் தேடி வெளி மாவட்டங்களுக்கு சென்றுள்ளனர். வெளியூருக்கு சென்று பிழைப்பு நடத்த காரணம் இங்குள்ள அரசியல்வாதிகள்தான். அரசியல் என்பது அவர்கள் தேவைகளை மட்டும் பூர்த்தி செய்து கொள்வதற்காக அல்ல. அனைவரது தேவைகளையும் பூர்த்தி செய்வதுதான் அரசியல்.
’யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்று சொல்லக்கூடிய கட்சி மக்கள் நீதி மய்யம். சாதியை வீட்டுக்குள்ளேயே வைத்துக்கொள்ளுங்கள். வெளியே அதனைக் காட்டிக் கொள்ளக்கூடாது. நான் தமிழ்நாடு முழுவதும் சுற்றிவருகிறேன். அனைத்து இடங்களிலும் குடிநீர் பிரச்னை இருக்கிறது. சில இடங்களில் 10 நாட்களுக்கு ஒருமுறையும், சில பகுதிகளில் 3 நாட்கள் ஒரு முறையும் தண்ணீர் வருகிறது.
வசதி படைத்தவர்கள் பணம் கொடுத்து தண்ணீரை வாங்கி பயன்படுத்தி வரக்கூடிய சூழல் நிலவிவருகிறது. மக்களுக்கு தூய்மையான குடிநீர் வழங்குவது அரசின் கடமை. இது மிகவும் சவாலான பணியும்கூட. மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கையில் மக்கள் அனைவருக்கும் குடிநீர் வழங்குவது என்று குறிப்பிட்டுள்ளோம். நாங்கள் தேர்தலில் ஜெயித்தால் நிச்சயம் செய்துக்காட்டுவோம். அதற்கான திட்டங்கள் எங்களிடம் உள்ளன”, என்றார்.
அப்போது, கூட்டத்தில் ஒருவர் மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு சட்டென்று கோபப்பட்ட கமலஹாசன், ’கட்சியின் தேர்தல் அறிக்கை, மக்கள் நீதி மய்யத்தின் இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. நாளிதழ்களிலும் செய்திகள் வந்துள்ளன. எங்களின் தேர்தல் வாக்குறுதி 15 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது என்று பதிலளித்து பரப்புரையை முடித்துக் கொண்டார்.