இந்தியாவில் இரண்டு இடங்களில் மட்டுமே காலபைரவருக்குத் தனி ஆலயம் உள்ளது. முதலாவது ஆலயம் காசியில் அமைந்துள்ளது. இரண்டாவது ஆலயம் தமிழ்நாட்டில் உள்ள தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் அமைந்துள்ளது. அதியமான் கோட்டையில் அமைந்துள்ள தட்சணகாசி காலபைரவர் ஆலயம் 1,200 ஆண்டுகள் பழமையானது.
இந்த ஆலயத்தில் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி தினத்தில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். கார்த்திகையில் வரும் தேய்பிறை அஷ்டமி காலபைரவர் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று (டிசம்பர் 8) தேய்பிறை அஷ்டமி காலபைரவர் ஜெயந்தியை முன்னிட்டு அதிகாலை சுவாமிக்கு சிறப்புத் திருமுழுக்கு ஆராதனை நடைபெற்றது.
சுவாமி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வழக்கமாக கால பைரவர் கோயிலுக்குத் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் வழிபடவருவார்கள். இந்த முறை கரோனா தடுப்பு நடவடிக்கையாக வெளிமாநில, வெளிமாவட்ட மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதனையடுத்து தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் மட்டுமே இதில் கலந்துகொண்டனர். கோயிலுக்கு வருபவர்களை காய்ச்சல் பரிசோதனை செய்து அதன்பின் கைகளில் கிருமிநாசினிகள் தெளித்த பின்னரே சுவாமி தரிசனம்செய்ய அனுமதித்தனர்.