தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் காவல் நிலைய துணை ஆய்வாளர் துரைராஜ், விஜய் சங்கர் இருவரும் தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். தணிக்கையின் போது கிருஷ்ணகிரியில் இருந்து தருமபுரி நோக்கி இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.
அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் தெரிவித்ததால் சந்தேகமடைந்த காவல் துறையினர் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். அவர்கள் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி கிட்டபையனூர் பகுதியைச் சேர்ந்த அர்ஜுனன் (35), கிருஷ்ணகிரி மாவட்டம் நவாப்மேடு பாலாஜி நகரை சேர்ந்த ராஜா (30) என தெரியவந்தது.
இவர்கள் காரிமங்கலம் அடுத்த செல்லமாரம்பட்டியில் கடந்த மாதம் 11ஆம் தேதி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பழனியம்மாள் மற்றும் அவரது மருமகள்கள் சசிகலா, செவ்வந்தி ஆகியோர் அணிந்திருந்த ஏழு சவரன் நகையை பறித்துச் சென்றது தெரியவந்துள்ளது. இவர்கள் மீது தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை, தொப்பூர், பாலக்கோடு, மாரண்டஅள்ளி மதிகோண்பாளையம் உள்ளிட்ட ஐந்து காவல் நிலையங்களில் பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.
காவல் துறையினர் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ஏழு சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்து, இருவரையும் பாலக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.