தர்மபுரி மாவட்ட மக்கள் காளைகளை வைத்து மஞ்சுவிரட்டு போட்டிகளை பன்னெடுங் காலங்களாக நடத்திவந்தனர். ஆனால், இளைஞர்கள் தர்மபுரியிலும் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த வேண்டும் என்பதற்காக ஜல்லிக்கட்டு பேரவையைத் தொடங்கி மாவட்டம் முழுவதும் 250-க்கும் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வந்தனர்.
முன்னதாக இந்த மாவட்டத்தில் காளை வளர்ப்பவர்கள் வெளி மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தங்களது காளைகளை அழைத்துச் சென்று பங்கேற்று வந்தனர்.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவர்களின் நீண்ட நாள் கனவு மெய்ப்படும் வகையில், இன்று (பிப்.13) பென்னாகரம் சாலையில் உள்ள டிஎம்சி மைதானத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி வெகு விமரிசையாக தொடங்கியது.
போட்டியை, மாவட்ட ஆட்சியர் கார்த்திகா தொடங்கிவைத்தார். இப்போட்டிகளில் 500 காளைகள் பங்குபெறுகின்றன. காளைகளை அடக்க 300 மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்துள்ளனர். போட்டியில் கலந்துகொள்ளும் காளைகளை கால்நடை பராமரிப்பு துறையினர் சோதனை செய்த பின்பு போட்டியில் அனுமதிக்கின்றனர்.
30 மருத்துவ குழுக்களும், ஆறு ஆம்புலன்ஸ் வாகனங்களும் போட்டி நடத்தப்படும் இடத்தில் தயார் நிலையில் உள்ளன. பாதுகாப்பு பணியில் 900 காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதன்முறையாக போட்டி நடைபெறுவதால், இரு மாவட்டத்தைச் சேர்ந்த மக்களும் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: வேந்தன்பட்டி ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்