தர்மபுரி: அரசு மருத்துவமனையிலிருந்து திருடப்பட்ட ஆண் குழந்தையை 48 மணிநேரத்தில் மீட்ட காவல் துறையினரைப் பொதுமக்கள் பாராட்டிவருகின்றனர்.
குழந்தை கடத்தல்
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த நாச்சானூர் கிராமத்தைச் சேர்ந்த அருள்மணியின் மனைவி மாலினிக்கு, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 19ஆம் தேதி இரவு ஆண் குழந்தை பிறந்தது. மறுநாள் காலை எட்டு முப்பது மணிக்கு அந்தப் பச்சிளம் குழந்தை மாயமானது.
இது குறித்து உடனடியாக நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வுசெய்தார் .
சிசிடிவி காட்சிகள் ஆய்வு
பின்பு காவல் துணைக் கண்காணிப்பாளர் அண்ணாதுரை தலைமையில் 17 பேர் கொண்ட இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குழந்தையைக் கண்டுபிடிக்கும் பணி முடுக்கிவிடப்பட்டது. இதனை அடுத்து தனிப்படை காவலர்கள் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, நேதாஜி புறவழிச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவு காட்சிகளை ஆராய்ந்து குழந்தையைத் திருடியவர்களை அடையாளம் கண்டனர்.
குழந்தை பெற்றோரிடம் ஒப்படைப்பு
இதனை அடுத்து, இன்று (ஜூன் 22) இண்டூர் பகுதியில் பதுங்கியிருந்த தன்ஷிகா, அவரது கணவர் ஜான் பாஷா, குழந்தை கடத்தலுக்கு உதவிய ரேஷ்மா (தன்ஷிகாவின் தாய்), பேகம் பீர் (தன்ஷிகாவின் பாட்டி) ஆகிய நான்கு பேரைப் பிடித்து, அவர்களிடமிருந்து குழந்தையை மீட்டனா். பின்பு நான்கு பேரையும் கைதுசெய்து தர்மபுரி நகர காவல் நிலையத்தில் விசாரணை செய்தனர்.
இதனிடையே குழந்தையை அருள்மணி-மாலினி தம்பதியிடம் தர்மபுரி காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் ஒப்படைத்தார்.
எஸ்பி பேட்டி
இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த காவல் கண்காணிப்பாளர், "கடந்த 20ஆம் தேதி 10 மணி அளவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தையைக் காணவில்லை எனப் புகார் வந்தது.
உடனடியாக இரண்டு தனிப்படைகள் அமைத்து, சிசிடிவி காட்சிகளைக் கொண்டு குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனர். தொடர்ந்து இண்டூர் பகுதியில் நான்கு பேரை கைதுசெய்து, அவர்களிடமிருந்த குழந்தை மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது" என்றார்.
இதையும் படிங்க: நத்தத்தில் 4 போலி மருத்துவர்கள் கைது