தருமபுரி: தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் சுற்றுலாத் தளத்திற்கு இன்று (டிச.9) காலை விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த சுகாதாரத் துறையில் பணியாற்றும் அரசு மருத்துவர், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள், தங்களது குடும்பத்துடன் ஒகேனக்கல் பகுதியை நோக்கி சுற்றுலா சென்றுள்ளனர்.
இந்த நிலையில், காலை 8.30 மணி அளவில் ஒகேனக்கல் வனப்பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, திடீரென மலைப்பாதையில் கவிழ்ந்துள்ளது. இதனை அடுத்து, அருகில் இருந்தவர்கள் பென்னாகரம் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.
இவ்வாறு கிடைத்த தகவலின் பேரில் உடனடியாக பென்னாகரம் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இதனைத் தொடர்ந்து, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இவர்களில் பலத்த காயம் அடைந்த 5 நபர்கள் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். மேலும், இந்த விபத்தில் 35 பேருக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இதனிடையே, இந்த பேருந்து விபத்து காரணமாக ஒகேனக்கல் மலைப் பாதையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: போலி பாஸ்போர்ட் பயன்படுத்தி இலங்கை செல்ல முயன்ற திபெத் இளைஞர் கைது!