தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்தானது தற்போது 75 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைக்கு வரும் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கபினி அணையில் இருந்து 29 ஆயிரத்து 583 கன அடி நீரும், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 43 ஆயிரத்து 272 கன அடி நீரும் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீர் தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நேற்று (செப். 21) வந்தடைந்தது. அப்போது நீர்வரத்தானது காலை நிலவரப்படி 20 ஆயிரம் கன அடியாகவும், மாலை 40 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. இதைத்தொடர்ந்து இன்று (செப். 22) காலை நீர் வரத்து 60 ஆயிரம் கன அடியாகவும், 9 மணி நிலவரப்படி 75 ஆயிரம் கன அடியாகவும் உயர்ந்தது.
நீர் வரத்து உயர்வு காரணமாக ஒகேனக்கல் பகுதியில் தாழ்வான இடங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல மாவட்ட நிர்வாகம் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒகேனக்கல் மெயின் அருவி பகுதிக்குச் செல்லும் நடைபாதையில் தண்ணீர் வழிந்து ஓடி வருகிறது. ஒகேனக்கல் மெயின் அருவி, சீனியருவி, ஐவர் பவனி பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதையும் படிங்க: தருமபுரி மாவட்ட பஞ்சாயத்துக்கு மத்திய அரசின் விருது