தர்மபுரி: கர்நாடக மாநிலத்தின் காவிரி கரையோர பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாகவும் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து நீர் உபரியாக காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுவதாலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நான்காவது நாளாக தொடர்ந்து அதிகரித்துள்ளது.
நேற்று (அக்.14) காலை நிலவரப்படி நீர்வரத்து 50 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இன்று (அக்.15) காலையில் 9 மணியளவில் 78 ஆயிரம் கனஅடி ஆகவும் நண்பகல் நிலவரப்படி 85 ஆயிரம் கனஅடி ஆகவும் உள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஒகேனக்கல் மெயின் அருவி மற்றும் ஆற்றங்கரை பகுதிகளில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. பாதுகாப்பு பணியில் காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். நீர்வரத்து மேலும் உயர்ந்து ஒரு லட்சம் கனஅடி வரை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இரண்டாவது நாளாக மழை வெள்ளம்.. சிக்கித் தவிக்கும் அந்தியூர்...