தருமபுரி மாவட்டம் அரூர் அருகே திருவிக நகர் பகுதியைச் சேர்ந்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியையின் குடும்பத்தில், கடந்த சில நாள்களுக்கு முன் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் கலந்துகொள்ள சென்னையிலிருந்து வந்த உறவினர்கள், அரூர் பகுதியில் உள்ள தலைமை ஆசிரியை வீட்டில் தங்கினர். பின்னர், திருமணத்தில் கலந்துகொண்டு ஊர் திரும்பியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து கடந்த மூன்று நாள்களுக்கு முன் தலைமை ஆசிரியருக்கு காய்ச்சல் ஏற்பட்டு அவதிப்பட்டார். பின்னர், அவர் கரோனா வைரஸ் பரிசோதனை செய்தார். இதன் முடிவில் அவருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அரூர் திருவிக நகர் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.
கரோனா தொற்று பாதிக்கப்பட்ட அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை, திருமணத்தை முன்னிட்டு தனது வீட்டின் அருகில் இருந்தவர்கள், உறவனர்களை அழைத்து விருந்து வைத்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆசிரியை வீட்டில் விருந்து சாப்பிட்டவர்கள், தற்போது கலக்கத்தில் உள்ளனர்.
மேலும், நல்லம்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.