தருமபுரி மாவட்டம் அதகபாடி பகுதியில் தனியார் கிரானைட் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இத்தொழிற்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். கடந்த மே மாதம் தொழிற்சாலையில் பணியாற்றிய 29 நபர்களை கிரானைட் தொழிற்சாலை நிர்வாகம் ஆட்குறைப்பு நடவடிக்கையில் நீக்கியது.
பணிநீக்கம் செய்யப்பட்ட 29 தொழிலாளர்களின் குடும்பத்தினர் மீண்டும் அவர்களுக்கு பணி வழங்கக் கோரி கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து பல்வேறு வகைகளில் போராட்டங்களையும், 20 நாள்கள் காத்திருப்பு போராட்டத்தையும் நடத்தினர்.
ஊழியர்களின் குடும்பத்தினர் போராட்டத்திற்கு செவி சாய்க்காத கிரானைட் நிர்வாகத்தினரிடம் மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வாய்ப்பு வழங்கக் கோரி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அப்போது, வேலைவாய்ப்பு இல்லாததால் தங்கள் வாழ்வாதாரத்திற்கு வழியில்லை எனக்கூறி குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டைகள் ஆகியவற்றை மனுவுடன் மாவட்ட ஆட்சியரிடம் வழங்க 50க்கும் மேற்பட்டோர் தங்கள் குழந்தைகளுடன் வந்ததால் பரபரப்பு நிலவியது.