தர்மபுரி மாவட்டம் இண்டூர் அடுத்த பாலவாடி உயர்நிலைப் பள்ளியில் சுமார் 150 மாணக்கர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வரும் சங்கர் என்பவரின் வழிகாட்டுதலுடன், பள்ளியில் 700 மரங்களை நட்டு மாணவர்கள் பராமரித்து வருகின்றனர்.
கரோனா தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல், மாணவர்கள் ஆன்லைன் மூலம் வீட்டிலிருந்த படியே படித்து வருகின்றனர். இப்பள்ளி மாணவர்களோ படிக்கும் நேரம் தவிர, மற்ற ஓய்வு நேரத்தில் மரங்களை பராமரித்து வருகின்றனர். இந்த நிலையில், ஆசிரியரின் ஆலோசனைபடி அழிந்து வரும் மூலிகை செடிகளை மீட்கும் வகையில் மருத்து மூலிகை தோட்டம் அமைக்க முடிவு செய்தனர்.
இதற்காக மாணவா்கள் பள்ளி வளாகத்தில் இடைத்தை தேர்வு செய்து, தமிழர் தொன்மரபு மூலிகை தோட்டம் அமைத்து, சுக்கு, மிளகு, திப்பிலி, மஞ்சள், கீழாநெல்லி, சஞ்சீவி, கற்பூரவள்ளி, முடக்கத்தான் கீரை உள்ளிட்ட 100 வகையான மருத்துவ மூலிகை செடிகளை தொட்டி கட்டி நட்டு வளா்த்து வருகின்றனர்.
இங்கு வளர்க்கப்படும் மூலிகையின் பெயர், அறிவியல் மற்றும் ஆங்கில பெயர்கள், மருத்துவ குணங்கள், பலன்களை, பிற மாணவர்களும், பொதுமக்களும் தெரிந்து கொள்ளும் வகையில் அங்குள்ள சுவற்றில் எழுதி வைக்கப்பட்டுள்ளது.
இந்த பள்ளியில் தமிழர் தொன்மரபு மூலிகை தோட்டம் அமைப்பதை அறிந்து, அருகில் உள்ள பாடி கிராமத்தை சேர்ந்த பீனிக்ஸ் குழுவினர், அரசு பள்ளிக்கு வந்து மூலிகை தோட்டத்தில் செடிகளுக்கு உரமிடுதல், நீர் ஊற்றுதல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு மாணவர்களுக்கு உதவி செய்து வருகின்றனர். இதேப் போல் இப்பள்ளியின் முன்னாள் மாணவர்களும் இப்பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.