தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பேருந்து நிலையத்தில் இன்று (அக்.3) இணைப்பு சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு அப்பணிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் கோ கிரீன் தர்மபுரி (Go Green Dharmapuri) என்ற செயலியை தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மலர்விழி, அரூர் சட்டப்பேரவை உறுப்பினர் சம்பத்குமார், முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.பி.அன்பழகன், "மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் கோ கிரீன் தருமபுரி என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 2021 பிப்ரவரி மாதத்திற்குள் சுமார் 25 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மரங்களை நடுவதில் ஆர்வம் உள்ள தன்னார்வலர்கள், தனிநபர்கள் உள்ளிட்டோர் கோ கிரீன் தர்மபுரி என்ற செயலியை பதிவிறக்கம் செய்தால் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்படும்.
குறிப்பாக நல்லம்பள்ளி பகுதியில் இந்த ஆண்டு மட்டும் 7.35 கிலோ மீட்டர் சாலை மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.4.8 கோடி அரசு ஒதுக்கி உள்ளது. நெடுஞ்சாலைத்துறை சார்பில் சென்ற ஐந்து ஆண்டுகளில் தர்மபுரி மாவட்டத்தில் சாலை மேம்பாட்டு பணிக்காக ரூ.441 கோடியே 35 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பாளையம்புதூர் ஜெகந்நாதன் கோம்பை பகுதியில் 65 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தடுப்பணை பழுதாகி இருந்ததை ரூ.3 கோடி மதிப்பீட்டில் அரசு சீர் செய்து உள்ளது" என்றார்.
இதையும் படிங்க: ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டட பணி: அமைச்சர் ஆய்வு