தர்மபுரி திமுக மேற்கு மாவட்டம் சார்பில் அரூர் ரவுண்டானாவில், தருமபுரி மேற்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் தலைமையில், பேராசிரியர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய பழனியப்பன், “இந்தி திணிப்புக்கு அந்த காலத்தில் குரல் கொடுத்தவர் அண்ணா. இந்த காலத்தில் குரல் கொடுத்தவர் கருணாநிதி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இந்தி திணிப்பால் தமிழ்நாட்டு மக்கள் பாதிக்கக் கூடாது என்பதற்காக உதயநிதி ஸ்டாலின் குரல் கொடுத்து வருகிறார். அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் உங்களுக்கு என்ன வருகிறது? இது எங்கள் இயக்கம். திராவிட முன்னேற்றக் கழக இயக்கம். உழைப்பவர்களுக்கு வாழ்வு கொடுக்க எங்கள் தலைவர் தயாராக இருக்கிறார்.
அண்ணா, கருணாநிதியை அடையாளம் காட்டியதுபோல, கருணாநிதி ஸ்டாலினை அடையாளம் காட்டியதுபோல, தமிழ்நாடு காப்பாற்றப்பட வேண்டும். மொழிகள் காப்பாற்றப்பட வேண்டும் என வழிகாட்டியாக உதயநிதி ஸ்டாலினை அடையாளம் காட்டியுள்ளார்.
தமிழ்நாட்டு மக்கள் யாரை எதிர்பார்க்கிறார்களோ, அவர்களுக்கு பதவி கொடுப்பது எங்கள் தலைவரின் கடமை. எடப்பாடி பழனிசாமி ஊர் ஊராக பேசுகிறார். திமுகவில் மிட்டா மிராசுதாரர்கள்தான் பதவிக்கு வர முடியும். எடப்பாடி பழனிசாமி போன்ற சாதாரண தொண்டர் பதவிக்கு வர முடியாது என்று சொல்கிறார். எடப்பாடி பழனிசாமி சாதாரண தொண்டரா?
சசிகலா காலில் விழுந்து எப்படி பதவி வாங்கினார் என்று பக்கத்தில் இருந்து பார்த்த எனக்கு நன்றாக தெரியும். ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காக காலில் விழுந்து பதவி வாங்கினார். பதவி நிலைக்க வேண்டும் என்பதற்காக ஓ.பன்னீர்செல்வத்தை அணுகி பதவியை தக்க வைத்தீர்கள். பாஜக நிச்சயமாக அதிமுகவின் காலை வாரும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: பொதுக்குழுவிற்கு தயாராகும் ஓபிஎஸ்.. அதிமுகவில் நடப்பது என்ன?