தர்மபுரி மாவட்டத்தில் முதன்முறையாக 8 சிபிஎஸ்சி பள்ளிகளில் நீட் நுழைவுத் தேர்வு இன்று (ஜூலை 17) நடைபெற்றது. காலை 9 மணி முதலே தேர்வு நடைபெறும் மையங்களுக்கு முன்பு மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் குவிந்தனர். தேர்வு எழுத உள்ள மாணவர்களை தேர்வு நடத்தும் அலுவலர்கள் சோதனை செய்து, நீட் தேர்வு வழிகாட்டுதலின்படி தேர்வு மையத்திற்குள்ளே அனுமதித்தனர்.
தேர்வு எழுத உள்ள மாணவர்களை 2 பிரிவுகளாகப் பிரித்து கூட்ட நெரிசல் ஏற்படாமல் சோதனை செய்து அனுப்பினர். மாவட்டத்தின் பல கிராமப்பகுதிகளில் இருந்து நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் இத்தேர்வில் கலந்துகொண்டனர். அதன்படி, கிராமப்புறங்களைச்சோ்ந்த பெற்றோர் சிலர் குடும்பத்தோடு வந்து தங்கள் பிள்ளைகளை தேர்வுக்குக் கூடத்திற்கு அனுப்பினர்.
அந்த வகையில் தனியார் பள்ளி ஒன்றில் 'நீ நல்லா எழுதுவ.. கண்ணு... சந்தோசமா தேர்வு எழுது' என்று பாசத்துடன் விவசாயி ஒருவர் தனது மகளை வழி அனுப்பியது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது. முன்னதாக, மாவட்டத்திற்கு வெளியே சென்று தேர்வு எழுத செல்லவேண்டிய நிலையிருந்தது மாறி, தற்போது தர்மபுரி மாவட்டத்திலேயே 8 இடங்களில் தேர்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அதன்படி, இந்த 8 நீட் தேர்வு மையங்களில் 5,328 மாணவ-மாணவிகள் தோ்வு எழுதியது குறிப்பிடத்தக்கது.