தருமபுரி மாவட்டம், அரூர் திரு.வி.க நகரில் வசிப்பவர், குமார். இவர் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவரது வீட்டில் அதிமுகவினர் பணம் பதுக்கி வைத்திருப்பதாக, அரூர் தேர்தல் அலுவலர் வே.முத்தையனுக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இதனைத்தொடர்ந்து முத்தையன், வருமான வரித்துறையினருக்குத் தகவல் கொடுத்துவிட்டு, 4 தேர்தல் பறக்கும் படையினரின் குழு மூலம் குமாரின் வீடு முழுவதும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டார்.
அப்போது, நள்ளிரவு 2 மணியளவில், குமாரின் மனைவி பணத்தை ஒரு பையில் கட்டி வெளியே வீசியுள்ளார். அதனை, அதிமுகவைச் சேர்ந்த நேதாஜி என்பவர் எடுத்துச் சென்றுள்ளார். அவரை மடக்கிய தேர்தல் பறக்கும் படையினர், பையிலிருந்த 16 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயைப் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து தேர்தல் அலுவலர் வே.முத்தையன் நேதாஜியை விசாரணை செய்ததில், அதிமுகவைச் சேர்ந்த சரவணன் என்பவர் வரச் சொன்னதாகவும்; அவர் அழைத்ததன்பேரில் ஆசிரியர் குமார் வீட்டிற்கு வந்தேன். இந்தப் பணம் தேர்தலுக்கான பணம் தான் என ஒப்புதல் அளித்துள்ளார்.
மேலும், வீட்டில் இன்னும் பணம் இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதால், ஆசிரியர் குமார், வீட்டை டிஎஸ்பி தமிழ்மணி தலைமையிலான காவல் துறையினர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். அவரது வீட்டில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: திருமணத்தை மீறிய உறவில் இருந்த கணவர்- மனைவி தூக்கிட்டு தற்கொலை!