தருமபுரி: தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பேரூராட்சி கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி மகன் லட்சுமணன் வயது 50, இவர் எம்.கே.நகரில் பேரூராட்சி வளமீட்பு பூங்கா அருகில் தனக்குச் சொந்தமான நிலத்தில் சிறிய அளவிலான பட்டாசு குடோன் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணி அளவில் இந்த பட்டாசு குடோனில் வெடி விபத்து ஏற்பட்டது, இது குறித்து அருகிலிருந்தவர்கள் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். உடனடியாக விரைந்து வந்த நிலைய அலுவலர் செல்வம் தலைமையிலான தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.
ஆனாலும் வெடி விபத்தில் ஏற்பட்டதில் பட்டாசு குடோன் தரைமட்டமானது, அதிகாலை நேரம் என்பதாலும் ஊருக்குச் சற்று ஒதுக்குப் புறம் பட்டாசு குடோன் இருந்ததாலும் பெரும் அசம்பாவிதங்கள் ஏற்படவில்லை. இந்த வெடி விபத்து குறித்துத் தகவலறிந்து வந்த பென்னாகரம் துணை காவல் கண்காணிப்பாளர்.
மகாலட்சுமி, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மாவட்ட அலுவலர் மகாலிங்க மூர்த்தி மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்தில் வெடிவிபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்ட விசாரணையில் சமீப காலமாகப் பட்டாசு குடோன் செயல்படாமல் இருந்துள்ளது.
இந்த குடோனில் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு காவல் துறையினரால் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் மற்றும் பென்னாகரம் நீதிமன்றத்தில் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்கள் வைக்கப்பட்டு பாதுகாத்து இருந்தது என தெரிய வந்தது. மேலும் இந்த வெடி விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து பென்னாகரம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: “நாடாளுமன்றத் தேர்தலுக்கு 5 மாநில தேர்தல் வெற்றி முன்னோட்டமாக இருக்கும்” - ஜோதிமணி எம்பி