தருமபுரி மாவட்டம் மொரப்பூரில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம் செயல்பட்டுவருகிறது. இச்சங்கத்தில் அப்பகுதியிலுள்ள 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் காலை, மாலை இரு வேளைகளிலும் பால் விற்பனை செய்கின்றனர். தினமும் மொரப்பூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்திலிருந்து பத்து கேன் வீதம், காலை, மாலை வேளைகளில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில், கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால், கடந்த சில தினங்களாக தருமபுரி மாவட்ட ஆவின் நிர்வாகம் சார்பில் விவசாயிகளிடம் பால் கொள்முதல் செய்யும் அளவைக் குறைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளிடமிருந்து லிட்டருக்கு 100 மில்லி பால் திருப்பி அனுப்பப்படுகிறது.
இந்நிலையில், தினமும் 5 லிட்டர், 10 லிட்டர் பால் கொடுக்கும் விவசாயிகள், ஆவின் நிர்வாகம் திருப்பி அனுப்புகின்ற பாலை வீதிவீதியாகச் சென்று விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். தருமபுரி மாவட்ட ஆவின் நிர்வாகம், கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் பால் கொள்முதல் செய்வதைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தியதாகவும் தெரிகிறது. இதையடுத்து மாவட்டத்தில் ஒரு சில பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்களில், விவசாயிகளிடமிருந்து பால் கொள்முதல் செய்யப்படுவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே முழுமையான பால் வாங்காததால் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வந்த விவசாயிகள், தற்போது பால் கொள்முதலை முற்றிலுமாக நிறுத்தியுள்ளதால் பெரும் இழப்பைச் சந்திக்க நேரிடும் என்பதால், 50க்கும் மேற்பட்ட விவசயிகள் பாலை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க:பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பால் 30 ஏக்கர் பயிர்கள் நாசம்!