உயர் நீதிமன்றம் எட்டு வழிச்சாலைக்கான நில எடுப்பு அரசாணையை ரத்து செய்த பிறகும் தமிழ்நாட்டில் இத்திட்டம் நிறைவேற்றப்படும். இத்திட்டத்திற்கு ஏழு விழுக்காடு மக்கள் மட்டுமே எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்று பேசிய அமைச்சர் பாண்டியராஜனை கண்டித்து அரூர் அருகே நாச்சினாம்பட்டி கிராமத்தில் எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கம் மற்றும் விவசாயிகள் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இது குறித்து பேசிய விவசாயிகள், ”எட்டு வழிச்சாலையால் விவசாயிகளுக்கும் பொது மக்களுக்கும் எவ்வித பயனும் இல்லை. இத்திட்டத்தில் பயனடைவது கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே. மழை நீா் 130 டி.எம்.சிக்கு மேல் சென்று வீணாக கடலில் கலந்துள்ளது. தண்ணீரை தடுப்பணைகள் கட்டி தேக்கி வைத்திருந்தால் விவசாயம் காப்பாற்றபட்டிருக்கும். எட்டு வழிச்சாலை திட்டம் வளர்ச்சி திட்டம் என கூறுவது பொய். சென்னை முதல் சேலம் வரை 333 கி.மீட்டர் உள்ளது. ஆனால் 277 கி.மீட்டர் மட்டுமே எட்டு வழிச்சாலை திட்டம் செயல்படுத்த இருப்பது மக்களை ஏமாற்றக்கூடியது. எனவே விவசாயத்தையும், விவசாயிகளையும் அழிக்கும் இத்திட்டத்தை செயல்படுத்த விடமாட்டோம்” என்றனர்.