தருமபுரி அடுத்த அதகப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பொன்னன் (45), இவரது மனைவி ராதா (40). கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு ராதாவிற்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இண்டூரில் உள்ள தனியார் கிளினிக் ஒன்றுக்கு சென்று சிகிச்சைபெற்று விட்டு ராதாவுடன் பொன்னன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார்.
பொன்னன் குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, வரும் வழியில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். பொன்னன் வந்த இருசக்கர வாகனத்தை காவல் துறையினர் நிறுத்த முயன்றனர்.
போதையில் இருந்ததால் பொன்னன் வாகனத்தை சிறிது தூரம் சென்று நிறுத்த முயற்சித்ததாக கூறப்படுகிறது. அவரைப் பின்தொடர்ந்து வந்த காவல் துறையினர் கையிலிருந்த லத்தியை வாகனத்தை நோக்கி வீசினர். எதிர்பாராத விதமாக பொன்னனின் வாகனத்தின் சக்கரத்தில் லத்தி சொருகியது.
இதில் நிலை தடுமாறிய பொன்னன், ராதா கீழே விழுந்துள்ளனர். கீழே விழுந்ததில் ராதாவிற்கு முதுகுத் தண்டுவடம் முறிந்து தருமபுரி, கோவையில் சிகிச்சைப் பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து சிகிச்சைக்காக கோவை வந்திருந்த பொன்னன் தனது மனைவியின் நிலையை நினைத்து மனம் தாங்கமுடியாமல் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
![mystery](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-dpi-01-sadalathudan-salaimariyal-img-7204444_16072019224231_1607f_1563297151_503.jpg)
அதன் பின்னர் பொன்னன் கோவையில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டு அவரது உடல் அதகப்பாடி கிராமத்திற்கு எடுத்துவரப்பட்டது. பொன்னன் இறப்பில் மர்மம் உள்ளது, அவரின் உயிரிழப்பிற்கு காவல் துறையே காரணம், பொன்னன் உயிரிழப்பிற்கு காரணமான காவல் துறை மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என உறவினர்கள் தருமபுரி பென்னாகரம் சாலையின் குறுக்கே சடலத்தை வைத்து சாலை மறியல் செய்தனர். அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கும்விதமாக காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.