கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த ஊடேதுர்க்கம் வனப்பகுதியில் நேற்று (நவ.15) ஆண் காட்டுயானை உயிரிழந்து கிடந்தது. இது குறித்து தகவலறிந்து வந்த வனத் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் கவிபுரம் கிராமத்திற்குச் செல்லும் மின்சார வயரை இரண்டு விவசாயிகள் தங்களது விவசாய நிலத்தில் விலங்குகளை வேட்டையாட போட்டுள்ளனர். அங்கு வந்த ஆண் காட்டுயானை மின்சார வயரை மிதித்து உயிரிழந்தது தெரியவந்தது.
இதுதொடர்புடைய விவசாயிகளில் ஒருவரான வெங்கடேஷப்பாவை வனத் துறையினர் கைதுசெய்தனர். மற்றொரு விவசாயியான நாராயணப்பாவை தேடிவருகின்றனர். வெங்கடேஷப்பாவிடமிருந்து யானை தந்தம், மின்சார ஒயா்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் மாவட்ட வன அலுவலர் பிரபு தெரிவித்தாவது, "கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியிலிருந்து வெளியேறிய காட்டுயானைகள் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிகளில் முகாமிட்டுள்ளன.
வனவிலங்குகளைப் பொதுமக்கள் வேட்டையாடக் கூடாது. அவ்வாறு செய்தால் வனக்குற்றத்தின்கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: பவானிசாகர் அணை பழத்தோட்ட கேட்டை திறந்து ஊருக்குள் வந்த யானை!