தருமபுரி: நல்லம்பள்ளி அருகே உள்ள அதியமான் கோட்டை பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் வீடுகளில் கொலு பொம்மை செய்து வருகின்றனர். மண்ணைக் கொண்டு அச்சில் கடவுள் பொம்மைகளை வார்த்து அதனை நெருப்பில் சுட வைத்து, சுட வைக்கப்பட்ட சிலைகளுக்கு பல வகையான வண்ணங்களை தீட்டி தத்ரூபமான சுவாமி சிலைகள், கோயில் விக்ரகங்கள் உள்ளிட்ட கொலு பொம்மைகளை தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர்.
தற்போது தருமபுரி மாவட்டத்தில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் கொலு பொம்மைகளை அச்சில் வார்த்து நெருப்பில் சுட வைக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. மேலும், பண்டிகை நெருங்கி விட்டதால் குறைந்த அளவில் உற்பத்தி செய்த கொலு பொம்மைகளை மட்டுமே உற்பத்தியாளர்கள் விற்பனை செய்து வருகின்றனர்.
அதியமான் கோட்டையில் உற்பத்தியாகும் கொலு பொம்மைகள் கர்நாடக மாநிலம், பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி, அங்கிருந்து வியாபாரிகள் இங்கு வருகை தந்து கொலு பொம்மைகளை வாங்கிச் செல்கின்றனர்.
மேலும் சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பத்தூர் மற்றும் வேலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் இங்கிருந்து கொலு பொம்மைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த கொலு பொம்மைகள் செட்டு செட்டாக விற்கப்படுகின்றன. இந்த கொலு பொம்மை உற்பத்தியாளர்கள் கல்யாண செட், கும்பாபிஷேக செட், ராமர் கல்யாணம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வகைளிலான செட்டுகளை தயார் செய்து விற்பனை செய்கின்றனர்.
இந்த ஆண்டு கிரிக்கெட் செட் மற்றும் வராகி உள்ளிட்ட புதிய வகையான செட்டுகளையும் இவர்கள் தயார் செய்து விற்பனை செய்கின்றனர். இவை மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுகுறித்து கொலு பொம்மை தயாரிக்கும் குணா கூறுகையில், "தசாவதாரம், அஷ்டலட்சுமி, மீனாட்சி கல்யாணம் செட், உப்பிலியப்பன் செட், கனகதாரா ஸ்தோத்திரம் மற்றும் திருவேங்கடநாதர் செட் உள்ளிட்ட செட்களை விற்பனைக்கு வைத்துள்ளோம்.
நாங்கள் தயாரிக்கும் கொலு பொம்மைகளை பெங்களூரு, திருப்பத்தூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட பகுதியில் இருந்து வாங்கிச் செல்கின்றனர். நான் 38 ஆண்டுகளாக பொம்மை தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறேன். விலைவாசி உயர்ந்துள்ளதால் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டியுள்ளது.
ஆனால், கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு விற்பனையான விலைக்கு பொதுமக்கள் கொலு பொம்மைகளை கேட்கின்றனர். அந்த விலைக்கு விற்பனை செய்தால் எங்களுக்கு நஷ்டம் தான் ஏற்படும். இருப்பினும், வாடிக்கையாளர்களின் வருகையை கருத்தில் கொண்டு பழைய விலைக்கே விற்பனை செய்து வருகிறோம். இந்த ஆண்டு யசோதா, கண்ணன், வாரஹி, ஈஸ்வரி, ஸ்ரீரங்கம் செட் உள்ளிட்டவைகளை புதியதாக தயாரித்திருக்கிறோம்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: நீலகிரி வரையாடு திட்டத்தினை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!