தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்தில் அமைந்துள்ளது மூங்கில் மடுவு கிராமம். இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அக்கிராமத்தில் உள்ள மின்மாற்றி, கடந்த 12 தினங்களுக்கு முன்பு, உயர் மின் அழுத்தம் காரணமாக வெடித்துச் சிதறியது. இதனால் மின்சாரம் இல்லாமல் கிராம மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
கிராமத்தினர் மின் பொறியாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். ஆனால், மின் ஊழியர்கள் மின்மாற்றியை உடனடியாக மாற்றித்தர 5 ஆயிரம் ரூபாய் லஞ்சமாகக் கேட்டுள்ளனர். மின்சாரம் இல்லாமல் எதுவும்செய்ய முடியாது என்று அஞ்சி, கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து மின் ஊழியர்கள் கேட்ட லஞ்சத்தைக் கொடுத்துள்ளனா். அதனைப் பெற்றுக்கொண்ட உடனே அவர்கள் மின்மாற்றியை மாற்றியுள்ளனர். ஆனால், மாற்றப்பட்ட மின்மாற்றியும் மீண்டும் பழுதடைந்துள்ளது.
இதுதொடர்பாக ஊர் மக்கள் மின்சார வாரிய அலுவகத்தில் மீண்டும் புகார் அளித்துள்ளனர். ஆனால், ஊழியர்கள் மீண்டும் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர். ஏற்கனவே, கரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த கிராம மக்களால், மேற்கொண்டு பணம் கொடுக்க முடியவில்லை. இதனால், கடந்த 12 நாள்களாக மூங்கில் மடுவு கிராமம் இருளிலேயே மூழ்கியிருந்தது. மின்சாரம் இல்லாததால், அக்கிராமத்திலுள்ள விவசாயிகள், தங்களது வயலில் பயிரிட்ட வெங்காயம், மஞ்சள் போன்றவற்றிற்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் தவித்துவந்தனர். மேலும், குடிநீரும் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர்.
இது தொடர்பான செய்தியை நமது ஈடிவி பாரத் தமிழ் நேற்று முன்தினம் (ஜூன் 4ஆம் தேதி) வெளியிட்டிருந்தது. அதன்படி, இச்செய்தி உயர் அலுவலர்களின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டது. இதனையறிந்த மின் ஊழியர்கள் உடனடியாக மூங்கில் மடுவு கிராமத்திற்கு மின்மாற்றியைப் பொருத்தினர். இதன்மூலம், கிட்டத்தட்ட இரு வாரமாக இருளில் மூழ்கிய கிராமத்திற்கு வெளிச்சம் கிடைத்தது. தங்களின் பிரச்னைக்காகக் குரல் கொடுத்து, நடவடிக்கை எடுக்கவைத்த ஈடிவி பாரத்துக்கு அக்கிராமப் பொதுமக்கள் தங்களது உளம்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர்.
இதையும் படிங்க: கரன்ட் கேட்கும் மக்கள்... கரன்சி கேட்கும் அலுவலர்கள்!