தருமபுரி மாவட்டத்தின் வழியாக கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்குச் செல்லும் முக்கியச் சாலையாக சேலம்-தருமபுரி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலையிலுள்ள தொப்பூர் கணவாய் பகுதியில் தொடர்ந்து வாகன விபத்துக்கள் ஏற்பட்டுவருவதைத் தவிர்க்க தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார், மத்தியப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்து சாலையை விரிவாக்கம் செய்து தரக் கோரி மனு அளித்திருந்தார்.
அதன்படி தற்போது தொப்பூரிலுள்ள குறுகலான சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு, சாலையோரங்களில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இச்சூழலில் இப்பகுதிகளை செந்தில்குமார் பார்வையிட்டார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”பெங்களூருவிலிருந்து ராயக்கோட்டை வழியாக அதியமான் கோட்டை வரையும், அதியமான் கோட்டையிலிருந்து சேலம் வரையும் ஆறு வழிச்சாலை அமைப்பதற்கான திட்டங்கள் மத்திய அரசிடம் உள்ளது.
இவ்வாறு சாலைகள் அமைத்தல் இப்பகுதியில் விபத்துக்கள் முற்றிலும் குறையும். தமிழ்நாடு அரசைச் செயல்பட வைப்பது திமுகதான். 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்துசெய்ய வைத்ததும் திமுகதான். ஊரடங்கின் ஆரம்பத்தில் மட்டும் ஆயிரம் ரூபாய் வழங்கிவிட்டு, தற்போது எந்த நிவாரணமும் வழங்கவில்லை.
முதற்கட்ட ஊரடங்கில் வெறும் நூற்றுக்கணக்கிலிருந்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை, டாஸ்மாக் திறப்பு, கோயம்பேடு காய்கறிச் சந்தை ஆகியவை காரணமாக பல்லாயிரக்கணக்கில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
லட்சக்கணக்கில் மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவலை அரசு மறைக்கிறது. திமுக தலைவர் கூறியதுபோல வீட்டுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வழங்கியிருந்தால் கரோனா தொற்றை எளிதில் கட்டுப்படுத்தியிருக்கலாம்” எனத் தெரிவித்தார்.