தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள தும்பல்அள்ளி கிராமத்தில், இலங்கை தமிழர் முகாம் உள்ளது. இங்கு சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இவர்கள் பெயிண்ட் அடித்தல், கட்டடம் கட்டுதல் உள்ளிட்ட வேலைகளைச் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இலங்கை தமிழர் முகாமில் உள்ள 20க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதியானதையடுத்து, அப்பகுதியை தனிமைப் படுத்தி கட்டுப்பாட்டுப் பகுதியாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. இங்கு வசிக்கும் மக்கள் மருந்து, காய்கறிகள், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமலும், வேலை வாய்ப்பு இல்லாமலும் வீடுகளில் முடங்கி உள்ளனர்.
இதையறிந்த, திமுகவை சேர்ந்த தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், அங்கிருக்கும் மக்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான, 15 வகை உணவுப் பொருட்களை அனுப்பி வைத்தார். அவை அனைவருக்கும் கிடைக்கும்படி தனித்தனியாகப் பிரித்து வழங்கப்பட்டது. தக்க சமயத்தில் உதவிய செந்தில்குமார் எம்.பி.,க்கு முகாமில் தங்கியுள்ள அகதிகள் நன்றி தெரிவித்தனர்.