ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம், சுதந்திர தினம், தொழிலாளர் தினம், காந்திஜெயந்தி ஆகிய நான்கு நாள்கள் கிராம சபைக் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று கிராமங்களில் கிராம சபைக் கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை வெளியிட்டிருந்தது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக இன்று நடைபெறவிருந்த கிராம சபைக் கூட்டங்கள் ரத்துசெய்யப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்தனர்.
இந்நிலையில், மக்களைச் சந்திக்க எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பயப்படுவதாக, கிராம சபைக் கூட்டம் ரத்துசெய்தது குறித்து தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் தனது ட்விட்டர், ஃபேஸ்புக் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதில், "அக்டோபர் 2ஆம் தேதி நடைபெறவிருந்த கிராம சபைக் கூட்டம் கரோனா பெருந்தொற்று காரணமாக காலவரையின்றி தமிழ்நாடு முழுவதும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. கிராமங்களின் அடிப்படை உரிமையைப் பறிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது, இந்த மக்கள் விரோத அரசு. மக்களைச் சந்திக்க பயப்படும் இந்த அரசின் செயல் மிகவும் கண்டனத்துக்குரியது" எனப் பதிவு செய்துள்ளார்.
முன்னதாக கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி, ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டங்களும் ரத்துசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ’திமுக தலைமையிலான ஆட்சி அமைந்ததும் இழந்த உரிமைகளை மீட்டெடுப்போம்’ - கனிமொழி உறுதி!