தருமபுரி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்குமார், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் இடைத் தேர்தல் தொகுதிகளின் திமுக வேட்பாளர்கள் மணி, கிருஷ்ணகுமார் ஆகியோருக்கு ஆதரவாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று பரப்புரை மேற்கொண்டார்.
நடுப்பட்டி பகுதியில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:
5 முறை தமிழகத்தை ஆண்ட கருணாநிதி மாநில மக்களுக்கு பல நல்ல திட்டங்களை தந்தவர். தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையான ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் கருணாநிதி தந்ததுதான். அந்த திட்டத்தை தற்போதைய அரசு முழுமையாக செயல்படுத்தவில்லை. நிறைய பகுதிகளுக்கு ஒகேனக்கல் குடிநீர் செல்லவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இவ்விரு மாவட்ட குக்கிராமங்கள் வரை ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் கொண்டு சேர்க்கப்படும்.
மோடியையும், எடப்பாடியையும் வீட்டுக்கு அனுப்பும் தேர்தல் இது. உடலில் வந்துள்ள 2 கட்டிகளை பார்த்து, ஆபத்தான கட்டிகள் உடனடியாக அகற்ற வேண்டும் என்று மருத்துவர் கூறினால், உடனே அகற்றி விட வேண்டும். அதுபோல நாட்டை பிடித்துள்ள சனியன்களையும் வீட்டுக்கு அனுப்புவோம். கருணாநிதி தமிழக மக்களுக்கு உதவும் கரமாக இருந்து பாடுபட்டவர். இப்போது உள்ள முதல்வரோ உதவாக்கரையாக உள்ளார்.
8 வழிச் சாலை திட்டத்துக்காக விவசாயிகளின் நிலங்களை துன்புறுத்தி பிடுங்கினர். இந்த திட்டம் வேண்டாம், விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில் தான் சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என்று சட்டப் பேரவையில் நான் பேசினேன். இந்த திட்டம் தொடர்பாக விவசாயிகளிடம் முதலமைச்சர் பேச வேண்டும் என்றும் வலியுறுத்தினேன். தற்போது தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக அமைச்சர் ஒருவர் இது தொடர்பாக மேல் முறையீடுக்கு செல்வோம் என்கிறார். அக்கட்சியுடன் கூட்டணியில் உள்ள பாமக 8 வழிச் சாலையை எதிர்த்து வழக்கு தொடுத்தது. இப்போது, மேல் முறையீடு செய்வோம் என்று கூறும் அதிமுக-விடம் மேல் முறையீடு செய்ய வேண்டாம் என்று கூறும் திராணி, தெம்பு, அருகதை பாமக-வுக்கு இருக்கிறதா? தேர்தலில் இவர்களுக்கு சரியான பாடம் தாருங்கள். திமுக வேட்பாளர்களுக்கு வெற்றியை தாருங்கள். இவ்வாறு பேசினார்.